ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்- நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

தன் வேட்புமனு நிராகரிக்கப் பட்ட சோகத்தில், “ஜனநாயகம் இறந்து விட்டது” என்று நடிகர் விஷால் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் இறுதியாக நிராகரித்தனர். ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன் தினம்  நிறைவடைந்தது. 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று  நடைபெற்றது.

சுயேச்சை ஆக நின்ற  பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நடிகர் விஷால் வேட்புமனுவை ஏற்பதில் தொடக்கம் முதலே குழப்பம் நீடித்தது.

மாலை 5.30 மணியளவில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அவரது வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

உடனே  விஷால்  தன்னுடைய மனுவை ஏற்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டார். இதன் பின்  காவல்துறையினர் வந்து விஷாலை சமாதானப்படுத்தினர். தனக்கு ஆதரவாக கையெழுத்து போட்டவர்களை மிரட்டியதாக புகார் கூறினார். வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரத்தை  அதிகாரியிடம் அளித்தார்.

vishal

பின்னர் மறு முறை பரிசீலனைக்குப் பின்  விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து விஷால் தேர்தல் அதிகாரிகளுக்கு நன்றி கூறினார்.

ஆனால் நள்ளிரவு மீண்டும்  விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அந்த ஆடியோ உண்மை என்பதை ஏற்க இயலாது என்று கூறி அதை நிராகரித்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் 5 அம்மா இறந்தார், இந்த வருடம் ஜனநாயகம் இறந்துவிட்டது என்று தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார் விஷால்.

Comments

comments