இளையராஜாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்: எஸ்.பி.பி.சரண்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தற்போது தனது தந்தை பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து எஸ்.பி.பி 50 என்ற நிகழ்ச்சியை உலக நாடுகள் முழுவதும் நடத்தி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சி அமெரிக்க நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் இளையராஜா தன் பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் இசை கச்சேரி நடத்துவதற்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.பி.சரண் கூறியிருப்பதாவது:

இளையராஜாவின் இசையில் பாடுவதற்கு முன்பே அப்பா சினிமாவில் பாடிக் கொண்டிருக்கிறார், ஆயிரம் படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அவரது இசையில் அப்பா 2 ஆயிரம் பாடல்கள் வரை பாடியுள்ளார். ஆனால் அவர் இசை அல்லாத மற்ற இசை அமைப்பாளர்களின் இசையில் 38ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். அந்த பாடல்களே நாங்கள் இசை நிகழ்ச்சி நடத்த போதுமானது. எங்கள் நிகழ்ச்சிக்கு எந்த தடங்கலும் இல்லை.

இளையராஜாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை உள்பட எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று அப்பா உறுதியாக கூறிவிட்டார். அதனால் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்போம். அவர் அனுப்பிய நோட்டீசுக்கு மட்டும் எங்கள் வழக்கறிஞர் மூலமாக பதில் அனுப்புவோம். இது தொடர்பாக நாங்கள் யாரும் இளையராஜா குடும்பத்தினர் யாரையும் தொடர்பு கொண்டு பேசவில்லை. இவ்வாறு எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.

Comments

comments

SHARE